2013/07/13

வட கிழக்கில்...


பிரிந்து  விட்ட  ஆத்மாக்களும்
பிரியாத பல நினைவுகளும்
குண்டுகளின் வடுக்களைப் பார்த்து
கண்ணீ ர்  விடுகின்றன...

இனங்கள் வேறென்றாலும்
இறைவன் ஒன்றுதான்
இது தெரியாத இதயங்களே
இன்று இனவாதம் பேசுகின்றன...

அடர்ந்த காடுகளில்
அவரவர் அணிந்திருந்த
ஆடைகளும்
ஆயுதங்களும்
அலை கடலாய் அணிதிரள
அதிசயம் அங்கே
உயிரற்ற உடல்கள் சிந்தும்
குருதியெல்லாம் சிவப்பே...

செத்த பின்
சோனி என்ன
தமிழன் என்ன
சிங்களவன் என்ன
இழுத்துப் போட்டு மூடினால்
இதயங்களால் ஆயுதங்களை
இழுக்கத்தான் முடியுமா...

மறையளித்த இறைவனைத் துதித்து
மறைய வேண்டிய உயிர்கள்
மறைவிலிருந்து வரும் வெடி வாங்கி
மரணிப்பதுதான் கொடுமை
இதுதான் வடகிழக்கின் வழமை...
***
2001

தரித்திரவாதி...

சத்தியசோதனையும்
சிறிதளவு படித்தேன்
தெ மெயின் கேம்பும்
தெரிந்தளவு படித்தேன் ...

மகா பாரதத்தை என்
மாணவப்பருவத்திலும்
சீறாப்புராணத்தை
சுபஹு வேளையிலும்
படித்த ஒரு சரித்திரவாதி நான்...

ஆனால் இன்று
என் காதலியின் சரித்திரத்தை
எள்ளளவும்  படிக்க முடியாத
தரித்திரவாதி - நான்....
*** 

தங்கப் பெண்...


மஞ்சள் பூசிய பெண்ணவள்
மார்கழி முன் பனியில்
மணல் வார்த்த வீதி வழியே
மனமிட்டு வந்தபோது
மதி மயங்கி - நான்
மட்டுமா மிரண்டேன்
மாடொன்றையும் மிரள வைத்த
தங்கப் பெண்ணல்லவா
அவள்....
***



மறுபிறவி...

வானத்து நிலவாய் நீயும் -அதன்
விண்மீனாய் நானும்
இணைய முடியா
இரு இமயன்களாய்
சுற்றி வந்த நாம்
எடுத்துவிட்ட வரங்களால்
புவி மாந்தர்களுள்
பெண் நீயும்
ஆண் நானுமாய் - மீண்டும்
இணைய முடியாமல்
இவ்வுலகில் வசிப்பதேன்...
***