2013/03/20

நெஞ்சு விம்முகிறது …

காக்கையின் சத்தமுமில்லை
கிளியின் ஓசையுமில்லை
கடிகாரம் அலறிய போதே
கண் விழித்தேன்
காலை ஐந்து மணியாகிவிட்டது...

வரண்டுபோன நிலத்தில்
வேலைக்கு வந்த
வருத்தப்பட்ட வாலிபன் - நான்...

வசதிகள் நிறைந்த வாவிகள் இன்றிய
வான்மறை இறங்கிய வடிவான உலகம் இது...

இயற்கை அன்னை
இறந்து போனதுதான் இங்கு மர்மம்
இனம் பாராது தர்மம் கொடுப்பதுதான்
இவர்கள் தர்மம்...

அனைத்து இடங்களிலும் அரபிகள் ஆட்சி
அவர்களின் கீழ் அஜ்னபிகள் எழுச்சி
குளிருக்கே தண்ணி காட்டும் கூதல் இங்கு -அதில்
குளிக்க தயங்குது என் உடம்பிங்கு...

கால் தடுமாறி விழுந்தாலும்
காச்சல் எமை அடித்தாலும்
காலம் காலமாய் காதலித்து
கைபிடித்த மனைவியும்
கைகொடுக்கவறார்...

ஆரவாரித்து
உடல் கருகி
உயிர் வெந்து எனக்கு
அன்னமூட்டி வளர்த்த
பெற்றோரும் இப்போ வரார்
என புரிந்தும் கொண்டேன்...

அரபு ஹிந்தி என புரியா மொழிகள்
மலையாளி சூடானி என தெரியா முகங்கள்
ஒரு அறைச் சூழலில் ஒண்டும் அறியாதவர்களாய்
ஒத்துப் போகவேண்டிய நிர்ப்பந்தம்
இதுவே எமக்கு எழுதப்படாத ஒப்பந்தம்....

ஐந்தாரு பேருக்கு ஒரு கழிப்பறை
அடுத்தடுத்து நின்றே அதனுள் செல்லனும்
இல்லையேல் அடக்கித்தான் ஆகணும்...

மூவேளை உணவுக்கு
மூச்சுப் பிடித்து உழைப்போர் ஒருபுறம்
பெற்ற கடன் அடைக்க
பகுதி நேர வேலை தேடி அலைவோர் மறுபுறம்

ஐந்து மணிக்கெழும்பி
அழுது தொழுது துஆ செய்து
அரைகுறையாய் உண்டுவிட்டு
அடித்துப் பிடித்து உடுத்துக் கொண்டு
ஒப்பீசுக்கு ஓடோடிச்சென்று
அறியா மொழிகளுடன் நாட்டியம் ஆடிவிட்டு
அக்கமடேசன் வந்துசேர
ஆறு மணியாகும்....

அறுசுவை மறந்த என் நாக்கிற்கு
அடுப்படி காணாத என் கரங்கள்
ஏதோ ஆக்கிப் போட
தானும் நிறைந்ததாய்
என் வயிறும் விடுகிறது ஒரு பெரு மூச்சு
இதுவே இன்று என் மூச்சு...

வாரம் ஒரு தினம்
வடிவாய் குடும்பத்தவரையும்
சிறைக்கைதி காணலாம்
வைத்தியசாலையில் கிடந்தாலும்
எனைக் காண பைத்தியமாய் அலைவார்
எனைச் சார்ந்தோர்...

வெள்ளிக் கிழமைதான் ஒரு
விடிவெள்ளி உதிக்கும்
ஜூம்மா தொழுகையின் பின்னர்தான்
ஓரிரண்டு நம்னாட்டவரைக் காணலாம்...

விண்வெளிக்குச் சென்று வந்தவர்களாய்
விந்தைகள் பல பேசி சில
வினாடிகள் கதைப்போம்
அதுவே எமக்கு சொர்க்கம்
சிந்தித்தால் அது ஒரு வெட்கம்...

தொலைபேசியில் குரல் கேட்டு
திரிஜியில் முகம் பார்த்த பின்னர்
நாம் தத்தளித்த நாட்களை யாரறிவார்
தாவிப் பிடித்து கட்டியழ இங்கு
தாயுமில்லை தந்தையுமில்லை
என் சிந்தனைகள் சிலிர்க்க
என் சகோதரங்களும் இல்லை...

எனைக் கேட்டு கறி சோறாக்கி
என் பெருமிதத்தில் சந்தோசப்படும்
என் தாய் இன்றெங்கே...
எவ்வளவோ இழப்பை நான்
ஏற்படுத்திட்ட போதும்
எனை ஒரு போதும் வையாத
என் தந்தை இன்றெங்கே...

எந்த நேரம் எது கேட்பினும்
எனக்கே ஜோக்கடித்து
எழும்ப முடியாத போதிலும்
எழும்பித்தந்திடும்
என் தங்கை இன்றெங்கே...

எப்போது ஏசினாலும்
எதுவும் பேசாது தன் செயலால்
எனைச்சீண்டும்
என் தம்பி இன்றெங்கே...

எத்தனையோ வேதனைகள் சுமைகள்
எனை சூழவந்த போதும்
என் தங்கையை உம்மா என்றழைத்ததை விட
மாமா என்றென்னை அதிகமாய் அழைத்து
எனை சதாவும் சந்தோசப்படுத்திடும்
என் மருமகன் இன்றெங்கே...

இப்போ பெற்றோரின் தற்காலிக பிரிவுக்கும்
இங்கு நான் அழுததில்லை
என் சகோதரங்கள் உறவுகள்
எனை விட்டு தூரம் சென்றதற்கும்
நான் அழுததில்லை
அப்பா உம்மா வாப்பா என்றதைவிட
மாமா என்றே அதிகம் அழைத்த
அன்பென்பதறியாத என் மருமகனுக்கே
அதிகமாய் அழுகின்றேன்...

இனியும் வேண்டாம்
இந்த இயந்திர வாழ்க்கை
இதயமுள்ள நான்
இழந்தது எல்லாம் போதும்
இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்
இலங்கை நோக்கிய பயணத்திற்காய்......

முற்றும்.

என் இன்றைய உணர்வுகளுடன்...
பரினாஸ்
2013.01.08