2013/07/24

வழி தருமா என் விதி.....


ஏதோ வேலையென்று
என் துவிச்சக்கரவண்டி - அக்
கல்லூரிப் பாதையில் தவழ - அங்கே
கால்தடக்கி  ஒரு
கல்லூரி மாணவி
நடனமிடுவதைக் கண்டேன்...

கொடி மல்லிகையும் தோற்றிடும்
கொள்ளை அழகுடைய மங்கையவள்
கொவ்வை இதழ் குவித்து - விழுந்த
கொப்பிகளை இதமாக எடுத்திடும்
அழகை  அருகில் கண்டேன்...

அவமானத்தால் அவள்
ஆறேழு எட்டு வைத்து
திரும்பித் திரும்பிப் பார்க்க
தடம்புரண்டது என் மனம்
தாவிக்கொண்டது
இனம் புரியா ஓர்
இதமான ராகம்...

அன்று முதல் அவளது
அனைத்து அசைவுகளையும்
அறிந்து  ஆனந்தப்பட்டேன்...

ஆவணித் திங்கள் ஒன்றில்
அவள் பெயரை அறிந்து
ஆடித்தான் போனேன்...

ரோமியோ - ஜூலியெட்
சாஜஹான் - மும்தாஜ்
லைலா -  மஜ்னு
எல்லா காதலர்களும் வட
எழுத்தால் இணையாதவர்கள்
என் பெயரும் என்னவள் பெயரும் வட
எழுத்தில் இருப்பதை
எண்ணி இடிந்து போனேன்...

சிதறும் சின்னங்கள் வேண்டாம்
சிதறாத நினைவுகளுடன்
சின்னக் குடிசை ஒன்றில் - நாம்
சிறகடிக்க வழி  தருமோ என் விதி.....?
***
2004.

சொந்தங்களைத் தேடி...

உறவு ஒன்றிற்காக  - என்
உயிரையே கொடுத்தேன் - அவளிடம்

வீட்டுக்கு விளக்கேற்றுபவள்
இவள்தான் என்றேன் - என் பெற்றோரிடம்

அவள் நினைவுகள் சுமக்கும்
ஆத்மாவாக - நான் இருக்க

விளக்கேற்றும் அந்த நாளை
வித விதமாக எண்ணி - அவள் இருக்க

அந்த நாளும் வந்தது...

அதிகாலை அன்னை மடியினின்றும்
ஆதவன் விழித்தெழும் வேளை

ஆனந்த மழையில்
அவள் இல்லம் திளைத்திருக்க

எங்கோ எரியப்பட்ட
எரிகணை  ஒன்று
என்னவள் இல்லம் புகுந்திற்று

எரிமலை ஒன்று தீப்பிழம்புடன்
எழுந்தடங்கியதாக அயலவர் புலம்ப
எதையும் அறியாமல்  நான் விலம்ப

கருகிய உடல்களுக்குள் - என்
காரிகையை தேடியபோது
கால் ஒன்றும் கை ஒன்றும்
கிடைத்தது  கண்டு
கனத்துப்போனது  என் இதயம்
வெறுத்துப் போனது இவ்வுலக வாழ்க்கை

மானிடா.... கூறடா....
இலங்கை வானொலி தென்றலில்
சொந்தங்களைத் தேடி
எவ்வாறு நான் விண்ணப்பிப்பதென்று....?
***
2000 ஆம் ஆண்டு தென்றல் பன்பலைவரிசையின் சொந்தங்களைத் தேடி நிகழ்ச்சிக்காக என்னால் எழுதப்பட்டது.