2013/05/19

01. அமைவிடம்

எனது ஊரானது பொத்துவில் என அடையாளப்படுத்தப் படுகின்றது. இது கடலும் கடல் சார்ந்த நிலத்தினையும், வயலும் வயல் சார்ந்த நிலத்தினையும், மலையும் மலை சார்ந்த நிலத்தினையும், காடும் காடு சார்ந்த நிலத்தினையும் கொண்ட அழகியதொரு கிராமமாகும்.
எனது ஊரில் பெரும் பான்மையாக முஸ்லிம்களும் அடுத்து தமிழர்களும் அதனை அடுத்து சிங்களவர்களும் மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு பிரதான தொழிலாக நெல் வேளாண்மைச் செய்கையும், அதனை அடுத்து மீன்பிடித் தொழிலும், அதனை அடுத்து சுற்றுலாத் தொழிலும் காணப்படுகின்றன.
பொத்துவில் பிரதேசமானது இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். வடக்கில் திருக்கோயில் பிரதேச செயலகப் பிரிவையும், கிழக்கில் வங்காள விரிகுடாவையும் தெற்கு மற்றும் மேற்காக லகுகல பிரதேச செயலகப் பிரிவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பொத்துவில் பிரதேசமானது அம்பாறை நகரிலிருந்து 71 கிலோ மீற்றர் தூரத்திலும் கல்முனை நகரிலிருந்து 67 கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. இப் பிரதேசத்தின் நீளம் 21 கிலோ மீற்றர், அகலம் 06 -15 கிலோ மீற்றர் வரையாகவும் அமைந்துள்ளதுடன் பரப்பளவு 269 சதுர கிலோ மீற்றர் ஆகவும் உள்ளது.
எனது ஊரில் அழகிய 100 அடிகளுக்கும் மேற்பட்ட மண் மலைகளும், கொட்டுக்கள், குடாக்கள்ளி, முதலை மலை  என்னும் பிரமாண்டமான கல் மலைத்தொடர்களும், சர்வதேச கடலலைச்சருக்கள் போட்டிகள் நடைபெறும் அழகிய கடற் கரைச்சூழலும், மிக நீண்டதும் விசாலமானதுமான அருகம் குடா, மற்றும் பாலத்தினையும், பலம் கால மன்னர்கள் வாழ்ந்த இடங்களையும் அழகிய தென்னஞ் சோலைகளையும்,  பாலை, நாவல், விளா, காரை, புளியம் போன்ற பருவகாலப் பழங்களைத் தரும் மரங்களையும் கொண்ட அழகியதொரு கிராமமாகும்.
இக் கிராமம் பயங்கரவாதத்தால் 200 இற்கு மேட்பட்டோரையும், 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 116 பேரையும்  இழந்து கரைபடிந்திருந்த போதும். மிக அண்மைக் காலமாக உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகையால் புத்தெழுச்சி பெற்று வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.